

‘கீதா கோவிந்தம்’ தெலுங்குப் படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷ்மிகா மண்டன்னா, தமிழில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார்.
கார்த்தி நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான படம் ‘தேவ்’. அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.
எனவே, தன்னுடைய அடுத்த படத்தை, வெற்றிப் படமாகக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கார்த்தி. சிவகார்த்திகேயனை வைத்து ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் கார்த்தி.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்தில், கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மண்டன்னா நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது.
விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ தெலுங்குப் படத்தில் நடித்த ராஷ்மிகா மண்டன்னா, கன்னட மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். ‘கீதா கோவிந்தம்’ வெற்றியைத் தொடர்ந்து, மறுபடியும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மண்டன்னா.