

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள 'தேவி 2' திரைப்படம் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'லட்சுமி' படத்தைத் தொடர்ந்து 'வாட்ச்மேன்' படத்தை இயக்கினார் விஜய். ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. 'வாட்ச்மேன்' படத்தைத் தொடர்ந்து 'தேவி 2' படத்தை இயக்கத் தொடங்கினார் விஜய்.
பிரபுதேவா, தமன்னா, நந்திதா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படத்திம் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துவிட்டார் விஜய். இதன் இறுதிக்கட்டப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் தணிக்கைப் பணிகள் முடிவடையவில்லை.
'எல்.கே.ஜி' படத்தின் வெற்றி விழா குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், 'தேவி 2' திரைப்படம் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார்.
விரைவில் தணிக்கை செய்யப்பட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
'வாட்ச்மேன்' மற்றும் 'தேவி 2' ஆகிய படங்களின் வெளியீட்டுப் பணிகளை முடித்துவிட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயோபிக்கான 'தலைவி' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் இயக்குநர் விஜய்.