இளையராஜாவுடன் வேலை பார்க்கப் பயமாக இருந்தது: ஷங்கர்

இளையராஜாவுடன் வேலை பார்க்கப் பயமாக இருந்தது: ஷங்கர்
Updated on
1 min read

இளையராஜா சாருடன் ஒரேயொரு முறை சேர்ந்து பணியாற்றினேன் என்று இயக்குநர் ஷங்கர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில், பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள், இளையராஜா 75 எனும் பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் நாள் இசை நிகழ்ச்சியும், மறுநாள் இளையராஜாவுக்குப் பாராட்டு விழாவும் என நடந்த இந்த நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது.

இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஷங்கர் பேசியதாவது:

சினிமாவில் இன்ஸ்பிரேஷனாக எனக்கு நிறைய பேர் உண்டு. அவர்களையெல்லாம் பார்த்துத்தான், அவர்களின் திறமைகளைக் கண்டு வியந்துதான் சினிமாவுக்கு வந்தேன். அவர்களில் இசைஞானி இளையராஜாவும் முக்கியமானவர்.

என் வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் இளையராஜாவின் பாடல்களும் இசையும் என்னுடனே வந்துகொண்டிருக்கின்றன. இளையராஜா சார் பாடல்களைக் கேட்காமல், ஒருநாள் கூட நான் இருந்ததே இல்லை.

என்னுடைய முதல் படமான ‘ஜென்டில்மேன்’ படத்துக்கு ராஜா சாரிடம் செல்லவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். அவரை சந்திக்கவும் நேரம் வாங்கிவிட்டேன். ஆனால் எனக்கொரு பயம் இருந்துகொண்டே இருந்தது. அவரிடம் வேலை பார்க்கப் பயமாக இருந்தது.

ராஜா சாரிடம் எப்படிப் பேசுவது, இந்தக் காட்சியில் இப்படியொரு இசை வேண்டும் என்று எனக்குப் பிடித்த மாதிரியான இசையைக் கேட்க முடியுமா என்று யோசித்தேன். அந்த சமயத்தில், மரியாதை நிமித்தமாகவும், பயம் காரணமாகவும் ராஜா சாரிடம் செல்லாமலேயே இருந்துவிட்டேன்.

அதேசமயம், ராஜா சாருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது எனக்கு. அரசின் விளம்பரப் படம் ஒன்றைப் பண்ணினேன். அதற்கு ராஜா சார் இசையமைத்தார். அது வருமானவரி விழிப்புணர்வுப் படம். கமல் சார்தான் நடித்துக் கொடுத்தார். இளையராஜா சார்தான் இசை.

‘சார், இங்கே கிடார் இருந்தால் நன்றாக இருக்கும்னு நினைக்கிறேன் சார்’ என்றேன். உடனே அந்த இடத்தில் கிடாரின் இசையை ஒரே நிமிடத்தில் சேர்த்தார் ராஜா சார். ‘இங்கே கோரஸ் வைக்கலாமா சார்’ என்றேன். மறுப்பேதும் சொல்லவே இல்லை ராஜா சார். உடனே செய்துகொடுத்தார். என் வாழ்நாள் முழுக்க, ராஜா சாரின் இசை, தொடர்ந்துகொண்டே இருக்கும்.

இவ்வாறு ஷங்கர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in