

'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்காக விஜய் சேதுபதி டப்பிங் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
'ஆரண்ய காண்டம்' படத்தைத் தொடர்ந்து, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை இணையத்தில் வெளியிட்டது படக்குழு.
இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய் சேதுபதி கூறும் புலி கதை வசனத்தின் மூலமே ட்ரெய்லரை உருவாக்கியுள்ளனர். ட்ரெய்லரின் இறுதியில் "ஒரு நொடி.. பாம்பாவது... பள்ளமாவது... புலியாவது... உசுரு போனா மசுரு போச்சுனு.. கவலையே படாமல் நாக்கை நீட்டி தேனை நக்கி.. ஆஹான்னு சொன்னா...!" என்ற வசனத்தை இணையத்தில் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த வசனத்தை டப்பிங் செய்யும் போது விஜய் சேதுபதி எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதற்கான வீடியோ படக்குழு தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இடையே இடையே வசனத்தை மாற்றி பேசவே, மீண்டும் ஒன் மோர் என்று பேசியுள்ளார் விஜய் சேதுபதி. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து "தன் முயற்சியில் சற்றும் தளராத விஜய் சேதுபதி" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.
விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், ஃபஹத் பாசில், சமந்தா, இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். தியாகராஜன் குமாரராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீட்டு உரிமையை 'YNOTX ஸ்டூடியோஸ்' கைப்பற்றியுள்ளது.
விஜய் சேதுபதி திருநங்கையாகவும், மிஷ்கின் பூசாரியாகவும், ரம்யா கிருஷ்ணன் ஆபாசப் பட நடிகையாகவும் நடித்துள்ள இப்படம் மார்ச் 29-ம் தேதி வெளியாகிறது.