

அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி வரும் 'கள்ள பார்ட்' ஏப்ரல் மாத வெளியீடாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
'சதுரங்க வேட்டை 2', 'நரகாசூரன்', 'வணங்காமுடி' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'கள்ள பார்ட்' படத்தில் நடிக்கத் தொடங்கினார் அரவிந்த்சாமி. சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ராஜபாண்டி இயக்கி வரும் இப்படத்தில் ரெஜினா நாயகியாக நடித்து வருகிறார். இதில் அரவிந்த்சாமி ஹார்ட்வேர் இன்ஜினீயராகவும், ரெஜினா நடன ஆசிரியையாகவும் நடித்து வருகிறார். இதில் பார்த்தி என்ற புதுமுக நடிகரை வில்லனாக அறிமுகப்படுத்துகிறார்கள். ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து வருகிறார். இதுவரை 75% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஏப்ரல் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக இறுதிக்கட்டப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.