

ஆர்.ஜே.பாலாஜியும், விஷ்ணு விஷாலும் பேசி சமரசம் செய்து கொணடதால் 'எல்.கே.ஜி' படம் தொடர்பான மறைமுக மோதல் முடிவுக்கு வந்தது.
பிப்.22-ம் தேதி வெளியாகவுள்ள 'எல்.கே.ஜி' படத்துக்கு காலை 5 மணிக்கு காட்சிகள் ஒதுக்கியது ரோகிணி திரையரங்கம். இது தொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்ட ட்வீட் சர்ச்சைக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து இருவரும் மறைமுகமாக கருத்து மோதலில் ஈடுபட்டனர். இது சமூக வலைதளத்தில் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. மேலும், சிலர் இதுவும் நல்லதொரு விளம்பர யுக்தி என்று கருத்து தெரிவித்தார்கள்.
தற்போது இந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "விஷ்ணு விஷாலிடம் பேசினேன். இரு தரப்புமே சற்று உணர்ச்சி வசப்பட்டதால் தான் அப்படி பேசிவிட்டோம். எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டை பேசித் தீர்த்துக் கொண்டோம். அவருக்கு என்றும் நல்லதே நடக்க வேண்டுகிறேன்.. சமாதானம்" என்று தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜியின் ட்வீட்டை மேற்கோளிட்டு விஷ்ணு விஷால் "ஆமாம் மக்களே. 'எல்.கே.ஜி' படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.