

‘பூமராங்’ படம் மார்ச் 1-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவான படம் ‘பூமராங்’. அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், இந்துஜா, உபென் படேல், சுஹாசினி, ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணனே தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு, ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ரதன் இசையமைத்துள்ளார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியக் காட்சிக்காக, அதர்வா மொட்டை அடித்தார். இதனால் அடுத்த படத்தில் நடிக்கத் தாமதமாகும் என்று தெரிந்தும், காட்சியின் முக்கியத்துவம் கருதி மொட்டையடித்தார் அதர்வா.
படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வந்தது. இந்நிலையில் படம் மார்ச் 1-ம் தேதி ‘பூமராங்’ வெளியாவதாக இயக்குநர் ஆர்.கண்ணன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்தார்.
‘பூமராங்’ படத்தைத் தொடர்ந்து, தற்போது ‘குருதி ஆட்டம்’ படத்தில் நடித்து வருகிறார் அதர்வா. ‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீகணேஷ் இயக்கிவரும் இந்தப் படத்தில் அதர்வா ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார்.