

ஒரே டேக்கில் மிகப்பெரிய வசனத்தை அஜித் பேசியதைப் பார்த்து, ஒட்டுமொத்தப் படக்குழுவும் எழுந்துநின்று கைதட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடித்தார். ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். டி.இமான் இசையமைத்தார்.
‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் அஜித். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும்.
இன்னும் தலைப்பு வைக்காத இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், அஸ்வின் ராவ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சென்னையில் படம்பிடித்தால் அஜித்தைப் பார்க்க ரசிகர்கள் கூடிவிடுவார்கள் என்பதால், ஹைதராபாத்தில் உள்ள ராமாஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு படமாக்கி வருகின்றனர். ‘விஸ்வாசம்’ படமும் அங்கு படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது நீதிமன்றம் சம்பந்தப்பட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் அஜித் பேசும் வகையில் நீண்ட டயலாக் ஒன்று படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த டயலாக்கை, ஒரே டேக்கில் பேசி அசத்திவிட்டார் அஜித் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வளவு பெரிய டயலாக்கை அஜித் ஒரே டேக்கில் பேசியதைப் பார்த்து, ஒட்டுமொத்தப் படக்குழுவும் எழுந்துநின்று கைதட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்துக்குப் பிறகு ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரிக்கும் படத்துக்காக மறுபடியும் கால்ஷீட் கொடுத்துள்ளார் அஜித்.