

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் தொடர்பான பிரச்சினை இன்னும் முடிவடையாத காரணத்தால், இயக்குநர் சுராஜ் தனது படத்தைத் தொடங்க முடியாமல் காத்திருக்கிறார்.
ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது படக்குழு. இது தொடர்பாக வடிவேலும் எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் தாமதப்படுத்தியதால், 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தின் பிரச்சினை முடியும் வரை, வேறு எந்தவொரு படத்திலும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியது தயாரிப்பாளர் சங்கம். இப்பிரச்சினை தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து, தனது ஆட்கள் மூலமாகத் தூது அனுப்பியுள்ளார் வடிவேலு.
மேலும், இது தொடர்பான அடுத்த கூட்டம் விரைவில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வடிவேலுவிடம் கதை சொல்லி ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் இப்பிரச்சினைக்கு எப்போது முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று எதிர்நோக்கியுள்ளனர். முக்கியமாக இயக்குநர் சுராஜ் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறார்.
விமல், பார்த்திபன், வடிவேலு நடிக்கும் புதிய படத்தின் முதற்கட்டப் பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு, படப்பிடிப்பு தொடங்க தயார் நிலையில் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் இன்னும் வடிவேலு பிரச்சினை தீராததால், தன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க முடியாமல் காத்துக் கொண்டிருக்கிறார்.
இப்பிரச்சினை முடிந்து மீண்டும் அனைத்து நடிகர்களிடம் தேதிகள் வாங்கி படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்பதால், எப்போது தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பச்சைக் கொடி காட்டுவார்கள் என்று எதிர்நோக்கியுள்ளது படக்குழு.