

நடிகராக இருப்பதை விட தயாரிப்பாளராக இருப்பது தான் கஷ்டம் என்று 'தில்லுக்கு துட்டு 2' பத்திரிகையாளர் சந்திப்பில் சந்தானம் தெரிவித்தார்.
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், 'நான் கடவுள்' ராஜேந்திரன், தீப்தி, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தில்லுக்கு துட்டு 2'.
சந்தானம் தயாரித்துள்ள இப்படத்தை ட்ரைடண்ட் நிறுவனம் பிப்ரவரி 7-ம் தேதி வெளியிடவுள்ளது. அடுத்த வாரம் வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. அதில் சந்தானம், இயக்குநர் ராம்பாலா, ஒளிப்பதிவாளர் தீபக் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் சந்தானம் பேசியதாவது:
'' 'தில்லுக்கு துட்டு' முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள் இடைவிடாமல் சிரித்தார்கள். அதை நேரடியாகப் பார்த்தோம். அதுபோல, இப்படமும் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கலந்து பேசி செய்த படம் தான் 'தில்லுக்கு துட்டு 2'.
நான் இந்த அளவுக்கு வளர்வதற்கு எனக்கு முதுகெலும்பாக இருப்பது மாறன், ஆனந்த், குணா, சுந்தர், சேது மற்றும் ஜான்சன் ஆகியோர்தான். 'லொள்ளு சபா' தொலைக்காட்சி நிகழ்ச்சி வித்தியாசமானது என்று பெயர் வாங்கியது போல், இப்படத்திலும் வித்தியாசமான நகைச்சுவையாக இருக்க புது முயற்சி எடுத்திருக்கிறோம்.
ஷ்ரதா சிவதாஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தின் இரண்டாவது பாதி கேரளா பின்னணியில் இருப்பதால் கேரளா பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரைத் தேர்ந்தெடுத்தோம்.'மொட்டை' ராஜேந்திரன், விஜய் டிவி ராமர் என பலர் நடித்துள்ளனர்.
நடிகராக இருப்பதை விட தயாரிப்பாளராக இருப்பது தான் கஷ்டம். பலரும் ஆர்யா திருமணத்தைப் பற்றி தான் கேட்கிறார்கள். அதை அவரிடமே கேட்டுச் சொல்கிறேன். வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏற்கெனவே 3 படங்கள் முடிந்த நிலையில் இருக்கிறது. வெளியாவதற்குத் தாமதம் ஆகிறது.
நான் இயக்குநரானால் ஆர்யாவை வைத்து தான் படம் எடுப்பேன். சிம்புவுக்கென்று கதை எழுதி தான் இயக்க வேண்டும். எந்தப் படம் எடுத்தாலும் நல்ல படமாக இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. என்னை 'லொள்ளு சபா'வில் அறிமுகப்படுத்திய பாலாஜி அண்ணன், சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்புவுக்கு நன்றி''.
இவ்வாறு சந்தானம் பேசினார்.