

அஜித் நடித்து வரும் 'தல 59' படத்தின் வெளியீடு மே 1-ம் தேதியிலிருந்து மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து, 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க தொடங்கியுள்ளார் அஜித். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. இதில் அஜித் பங்கேற்கச் சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படம் அறிவிக்கப்பட்ட போதே, அஜித் பிறந்த நாளான மே 1-ம் தேதி வெளியீடு என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால், தற்போது அதில் மாற்றம் இருக்கும் என கருதப்படுகிறது. இதற்காகவே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'Mr.லோக்கல்' படத்தின் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக விசாரித்த போது, "’விஸ்வாசம்’ படக்குழுவினர் எதிர்பார்த்த வெற்றியை விட, மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்போது வரை பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. எப்போதுமே ஒரு படத்தின் தாக்கம் இருக்கும் போது, அதே நடிகரின் படத்தை உடனடியாக வெளியிடுவது நல்லதல்ல. அதனால் தான் 'தல 59' படத்தின் வெளியீட்டை மாற்றலாமா என்று ஆலோசனையில் இறங்கியுள்ளனர்" என்று திரையுலகினர் தெரிவித்தார்கள்.
இது குறித்த தகவல் வெளியானாலும், படக்குழுவினர் இதுவரை எந்தவொரு மறுப்புமே தெரிவிக்கவில்லை. இதன் மூலம் மே 1-ம் தேதி வெளியீடு இருக்காது எனத் தெரிகிறது.
போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் அஜித். அந்தக் கதை ஹெச்.வினோத் எழுதியுள்ள ஒரிஜினல் கதையாகும். அதையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.