

‘குணா’ படத்தில் குகைக்குள் படப்பிடிப்பு நடத்துவதற்கு பட்ட சிரமங்களை மறக்கவே முடியாது’ என்று இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதி தெரிவித்தார்.
நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதி, சமீபத்தில் தனியார் இணையதள சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''கமல் என பால்யகாலத்து நண்பன். அப்போதிருந்தே எங்களுக்குள் நல்ல புரிதல் உண்டு. நல்ல நண்பன் கமல்.
’குணா’ படத்தை இயக்கும் வாய்ப்பை கமல் எனக்கு வழங்கினார்.
அதில், ரூமில் சுற்றிக்கொண்டே கமல் பேசுவாரே. அந்தக் காட்சியை மறக்கவே முடியாது. ஒரு ரிகர்சல். ஒரே டேக். அந்த அறைக்குள் ரவுண்ட் ட்ராலியெல்லாம் வைக்கமுடியாது. கேமராவை வைத்துக்கொண்டு, கமலுடனே பயணித்து, படமாக்கினார் கேமராமேன். மிக அற்புதமாக வந்த அந்தக் காட்சி, தியேட்டரில் மிகப்பெரிய கைத்தட்டலைப் பெற்றது.
அதேபோ, ரோஷிணியைக் கடத்திக்கொண்டு, மலையில் பாழடைந்த சர்ச்சில் இருப்பார் கமல். அந்த சர்ச், செட் போடப்பட்டது. பிறகு அடுத்த இடத்துக்குக் கொண்டுசெல்வார். லொக்கேஷன் தேடும்போது, அங்கே இருந்த கைடு, ஒரு இடம் காட்டுவதாக குகைக்கு அழைத்துச் சென்றார்.
ஒரு சிறிய குகை. அதையடுத்து கொஞ்சம் பெரிய குகை. அதற்குள் நுழைந்தால், மிகப்பெரிய குகை. முதலில், சிறிய குகைக்குள் செல்லும் பாதையே ரொம்ப கரடுமுரடாகவும் பயங்கரமாகவும் இருந்தது. அங்கே ஒரு சமாதி. ‘’செண்பக நாடார் இங்குதான் தவறிவிழுந்து இறந்துவிட்டார்’ என்று போர்டு. ‘ஆமாம் சார் பார்த்து வாங்க’ என்றார் கைடு.
கமல், நான், கேமராமேன், தயாரிப்பாளர், ஆர்ட் டைரக்டர் என சென்றோம். இரண்டாவது குகையைக் கடந்தும் செங்குத்தான பாதையில் எந்தப் பிடிமானமும் இல்லாமல், ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு இறங்கினோம்.
ஒருவழியாக மேலே வந்தோம். ‘இங்கே வைச்சுக்கலாமா?’ என்று கமல் கேட்டார். ‘அத்தனை டெக்னீஷியன்களையும் நடிகர்களையும் கொண்டு போகணும். என்ன பாதுகாப்பு?’ என்று கேட்டேன். கமல், வனத்துறை அதிகாரிகளிடம் பேசி, அனுமதி வாங்கினார். மூன்றாவது குகையில் பாறையில் சின்னச்சின்னதாக படிகள் போல செதுக்கியெடுத்தோம். மேலிருந்து மிக கனமான கயிறுகளை இறக்கி வைத்திருந்தோம்.
தங்கும் இடத்தில் காலை 4 மணிக்குக் கிளம்பி 7 மணிக்குள் குகைக்குள் செல்வோம். அதற்குள் காலை உணவு. அப்புறம் மதியம் 3 மணி வரைக்கும் படப்பிடிப்பு. பிறகு மேலே வந்துதான் எல்லோருக்குமே சாப்பாடு. 3 மணிக்கு மேல குகையில் வெளிச்சம் கிடைக்காது. மழை பெய்தால், மேலே ஏறவும் முடியாது. வழுக்கி விட்டுவிடும்.
படப்பிடிப்பு நடந்த நாட்களில், ஸ்டண்ட் நடிகர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள், ஏதேனும் அசம்பாவிதம் நிகழாமல் இருக்கவும் பாதுகாப்புக்காகவும் உதவிக்கு இருந்தார்கள்.
குகைக்குள் சென்று 'குணா' படமெடுத்த வேதனைகளுக்கும் வலிகளுக்கும், அந்தப் படத்துக்கு கிடைத்த விருதுகளும் பாராட்டுகளும்தான் மருந்தாக அமைந்தன.
கொடைக்கானலில் இருக்கும் அந்தக் குகையை, ‘குணா’ குகை என்றே சொல்லத் தொடங்கிவிட்டார்கள் மக்கள்''.
இவ்வாறு இயக்குநர் சந்தான பாரதி தெரிவித்தார்.