ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் சந்தோஷ் சிவன்

ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் சந்தோஷ் சிவன்
Updated on
1 min read

ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்தது. த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, நரேன், மேகா ஆகாஷ் எனப் பலர் இந்தப் படத்தில் நடித்தனர்.

‘பேட்ட’ படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் எனத் தகவல் வெளியானது. லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படம் அரசியல் சம்பந்தப்பட்டது எனவும், படத்துக்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அந்தத் தகவலை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்தார்.

படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில், ரசிகர்கள் படத்தின் அப்டேட்டுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில், இந்தப் படத்துக்குத் தான் ஒளிப்பதிவு செய்வதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சந்தோஷ் சிவன்.

ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து ‘துப்பாக்கி’ மற்றும் ‘ஸ்பைடர்’ படங்களில் ஏற்கெனவே பணியாற்றியிருக்கிறார் சந்தோஷ் சிவன். தற்போது மூன்றாவது முறையாக இருவரும் இணைகின்றனர். அதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தளபதி’ படத்தில் ரஜினியுடன் பணியாற்றிய சந்தோஷ் சிவன், 28 வருடங்கள் கழித்து மறுபடியும் பணியாற்றுகிறார்.

ரஜினியின் இளைய மகளான செளந்தர்யாவுக்கு, இன்று (பிப்ரவரி 11) திருமணம் நடைபெற்றது. திருமண பரபரப்பில் இருந்து ஓய்ந்தபிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in