அஜித் போடும் அடுத்தடுத்த படக் கணக்கு!

அஜித் போடும் அடுத்தடுத்த படக் கணக்கு!
Updated on
1 min read

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘பிங்க்’ ரீ-மேக் படப்பிடிப்பு வேலை களை மும்முரமாகக் கவனித்து வருகிறார் இயக்குநர் எச்.வினோத். இதன் முக்கிய காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள்.

இதற்கிடையே வெங்கட்பிரபு, அஜித் கூட்டணியில் உருவான ‘மங்காத்தா’ படப் பாணியில் ஒரு படத்தைத் தொடங்கலாம் என்கிற பேச்சுவார்த்தை நடப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வினோத்தின் அறிமுகம்!

இந்நிலையில் பாலிவுட்டைச் சேர்ந்த போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்தில் தற்போது அஜித் நடித்து வரும் ‘பிங்க்’ ரீ-மேக் படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்தப் படத்தையும் இயக்குநர் வினோத் இயக்க வேண்டும் என்பது அஜித்தின் திட்டமாம்.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் வினோத் அமைத்த காவல் துறை பின்னணியிலான புலன் விசாரணை வியூகங்கள் அஜித்தை மிகவும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் அஜித்தை சந்தித்து வினோத் ஒரு கதை சொல்ல விரும்பி யுள்ளார். கதையைக் கேட்ட அஜித்துக்கு கதை பிடித்துப் போக, அப்போதே உருவாகிவிட்டது அஜித் - வினோத் கூட்டணி சங்கமம்.

இதற்கிடையே மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் விருப்பப்படி அவரது கணவர் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துக்கொடுக்க வேண்டும் என அஜித் விரும்பியுள்ளார். அந்த நேரத்தில் வினோத் உள்ளே வந்ததால் இந்த ரீ-மேக் படத்தை முதலில் வினோத்தை வைத்து இயக்கிவிட்டு, அடுத்து அவர் சொன்ன கதையை அடுத்த படமாக தொடரலாம் என்கிற யோசனை யில் அஜித் இருந்திருக்கிறார். அதற்கு சம்மதம் தெரிவித்ததோடு தற்போது ரீ-மேக் பட வேலைகளில் சுழன்றுகொண்டிருக்கிறார் வினோத்.

மீண்டும் சிவா

இதற்கிடையே சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதால், சிவாவிடம் தனக்கென்று மீண்டும் ஒரு கதையை எழுதக் கூறியிருக்கிறார் அஜித். தற்போது சிவா அந்த வேலைகளில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளார். ஆக, ‘பிங்க்’ தமிழ் ரீ-மேக்கை தொடர்ந்து இயக்குநர்கள் வினோத், சிவா ஆகிய இருவரது படங்களிலும் அஜித் கவனம் செலுத்துவார் என அவரது வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in