நம்ப முடியாத தருணம்: ஆர்யா திருமணம் குறித்து விஷால்

நம்ப முடியாத தருணம்: ஆர்யா திருமணம் குறித்து விஷால்
Updated on
1 min read

ஆர்யாவின் திருமணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விஷால்.

தமிழ் சினிமாவில் ஆர்யாவும் விஷாலும் நெருக்கமான நண்பர்கள். இருவரும் பல வருடங்களாகத் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால், இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள், யாரைத் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பெரிய விவாதமே நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விஷால் - ஆர்யா இருவருமே திடீரென தங்கள் திருமணச் செய்தியை அறிவித்தனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா ரெட்டியைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கடந்த பொங்கல் தினத்தன்று இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் விஷால். அனிஷா ரெட்டி, ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தவர்.

அதேபோல், ஆர்யாவும் சயிஷாவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக இந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே செய்திகள் வெளியாகின. ஆனால், இருவரும் மவுனம் சாதித்த நிலையில், காதலர் தினத்தன்று இந்தத் தகவலை ட்விட்டரில் உறுதிப்படுத்தினார் ஆர்யா.

‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சயீஷா, இந்தியில் பிரபல நடிகரான திலீப் குமாரின் பேத்தி. ஆர்யா - சயீஷா இருவரும் ‘கஜினிகாந்த்’ படத்தில் இணைந்து நடித்தபோது காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் அடுத்த மாதம் (மார்ச்) திருமணம் நடைபெற உள்ளது.

எனவே, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு திருமணப் பத்திரிகை கொடுக்கும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். அதன்படி, விஷாலுக்கும் பத்திரிகை கொடுத்துள்ளார் ஆர்யா. அப்போது புகைப்படம் எடுத்து, தன்னுடைய வாழ்த்துச்செய்தியையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் விஷால்.

“இது என் இதயத்துக்கு நெருக்கமாக அமைந்த புகைப்படம். என் நெருங்கிய நண்பன் ஆர்யாவின் திருமணப் பத்திரிகையைக் கையில் வைத்திருக்கிறேன்  என்பதை நம்ப முடியவில்லை. ஆர்யாவுக்கும் சயிஷாவுக்கும் வாழ்த்துகள்” என அந்த ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விஷால்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in