‘கண்ணே கலைமானே’ படத்தின் வெற்றி, தோல்வி பற்றி எனக்குக் கவலை இல்லை: உதயநிதி

‘கண்ணே கலைமானே’ படத்தின் வெற்றி, தோல்வி பற்றி எனக்குக் கவலை இல்லை: உதயநிதி
Updated on
1 min read

‘கண்ணே கலைமானே’ படத்தின் வெற்றி, தோல்வி பற்றி எனக்குக் கவலை இல்லை என பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக தமன்னா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி, வசுந்தரா ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். வருகிற 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “இதற்கு முன்பு என் பல படங்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நான் பல விஷயங்களைப் பேசினேன். ஆனால், இன்று இது ஒரு நல்ல படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொருவருக்கும் நான் நன்றியைக் கூறுகிறேன்.

ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவும் மிகச்சிறப்பாகப் பணியாற்றி உள்ளனர். ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் என ஒவ்வொருவரும் மிகச்சிறந்த விஷயங்களைத் தந்தனர். என் குழந்தைப் பருவ தோழியாக முக்கியக் கதாபாத்திரத்தில் வசுந்தரா நடித்துள்ளார், மிகவும் சவாலான கதாபாத்திரம் அது.

குறைந்தபட்சம் வருடத்துக்கு ஒருமுறை சீனு ராமசாமி சார் படங்களில் தமன்னா நடிக்க வேண்டும் என நான் பரிந்துரை செய்கிறேன். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் பெண்களைப் பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும். பாரதி கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.

படத்தின் இறுதியில் எனக்கும், வடிவுக்கரசி அம்மாவுக்கும் உணர்ச்சிகரமான காட்சி இருக்கிறது. அது மறக்க முடியாதது. முழு படப்பிடிப்பும் முடிந்தபிறகு தான் பாடல்கள் இசையமைக்கப்பட்டன. இது எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

‘கண்ணே கலைமானே’ படத்தின் வெற்றி அல்லது தோல்வி பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் இன்னும் ஒரு படத்தில் சீனு சாருடன் இணைந்து பணியாற்றுவேன். ‘மனிதன்’ மற்றும் ‘நிமிர்’ படங்களுக்குப் பிறகு என் கெரியரில் இந்தப் படம் பாராட்டப்படும் ஒரு படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in