

நிறத்தின் பெயரால் விமர்சனங்களை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு ‘பாரதி கண்ணம்மா’ என்ற தொடர் வரும் வாரம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்தக் கதையில் வரும் கண்ணம்மா என்ற இளம் பெண் பாத்திரம் இயல்பிலேயே நல்ல உள்ளம் கொண்டவர். அதே வேளையில் அனைவருக்கும் உதவும் குணம் கொண்ட பெண். இயற்கையில் கருமை நிறம் கொண்டிருக்கும் அவர், சமுதாயத்தில் சில விமர்சனங்களை சந்திக்கிறார். அந்த கண்ணம்மாவுக்கு அஞ்சலி என்ற மாற்றாந்தாய் சகோதரி ஒருவர் இருக்கிறார். அந்தப் பெண் புறத்தோற்றத்தால் அழகானவர். இந்த இருவருக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகள்தான் இந்தக் கதையில் சுவாரஸ்யம் கூட்டுகிறது.
கதையின்படி, கண்ணம்மாவுக்கு நல்ல உள்ளம் கொண்ட பாரதி என்ற ஒரு வாழ்க்கை இணை கிடைக்கிறது. இந்த இருவருடைய இல்வாழ்க்கையும் எவ்வாறு பயணிக்கிறது என்பதுதான் இந்தத் தொடரின் வெற்றிகரமான பயணம். ’மேயாத மான்’ படத்தில் நடித்த அருண் பிரசாத் இதில் பாரதியாகவும், கதாநாயகி கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியனும் நடிக்கின்றனர். இந்தத் தொடரில் அஞ்சலியாக நடிகை சுவீட்டி நடிக்கிறார். இந்தத் தொடரும் மற்ற வெற்றிகரமான சீரியல்களைப் போலவே காதல், பாசம், சென்டிமென்ட் என பலவகையான உணர்ச்சிகளைக் கொண்டதாக இருக்குமாம்.