

தனுஷ் நடித்துவரும் ‘அசுரன்’ படத்தில், இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
‘வடசென்னை’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி ‘அசுரன்’ படத்தில் இணைந்து பணியாற்றி வருகிறது. பூமணி எழுதியுள்ள ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
கடந்த மாதம் (ஜனவரி) 26-ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோவில்பட்டியில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மஞ்சு வாரியர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கருணாஸின் மகன் கென் கருணாஸ், இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இந்தப் படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஏற்கெனவே வெளியான ‘கொடி’ படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.