பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்

பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
Updated on
1 min read

பிப்.22-ம் தேதி வெளியிடப்பட்ட 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் ட்ரெய்லருக்கு சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

'ஆரண்ய காண்டம்' படத்தைத் தொடர்ந்து, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ஒவ்வொரு புகைப்படமும் இணையத்தில் வெளியிடப்பட, அவை பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் நேற்று (பிப்.22) ட்ரெய்லரை வெளியிட்டது படக்குழு. அதற்கு சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் சேதுபதி கூறும் புலி கதை வசனத்தின் மூலமே ட்ரெய்லரை உருவாக்கியுள்ளனர். அவர் கூறும் கதைக்கு தகுந்தாற் போல், கதாபாத்திரங்களின் பின்னணிக் கதை இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ட்ரெய்லரின் இறுதியில் "ஒரு நொடி.. பாம்பாவது... பள்ளமாவது... புலியாவது... உசுரு போனா மசுரு போச்சுனு.. கவலையே படாமல் நாக்கை நீட்டி தேனை நக்கி.. ஆஹான்னு சொன்னா...!" என்ற வசனத்தை இணையத்தில் பலரும் கொண்டாடி வருகிறார்கள். இதுவரை 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது 'சூப்பர் டீலக்ஸ்' ட்ரெய்லர்.

விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், ஃபஹத் பாசில், சமந்தா, இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். தியாகராஜன் குமாரராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீட்டு உரிமையை 'YNOTX ஸ்டூடியோஸ்' கைப்பற்றியுள்ளது.

விஜய் சேதுபதி திருநங்கையாகவும், மிஷ்கின் பூசாரியாகவும், ரம்யா கிருஷ்ணன் ஆபாசப் பட நடிகையாகவும் நடித்துள்ள இப்படம் மார்ச் 29-ம் தேதி வெளியாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in