

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகியுள்ள 'எல்.கே.ஜி' திரைப்படம் லாபத்தை எட்டியுள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் 'எல்.கே.ஜி'. பிப்.22-ம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் ஆர்.ஜே.பாலாஜியுடன் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்ட சக்திவேலன், பிப்.24-ம் தேதி வசூலுடன் போட்ட பணத்தை எடுத்துவிட்டார். இன்று (பிப்.25) முதல் வரும் தொகையை அவருக்கு லாபமாக அமைந்துள்ளது. மேலும், தயாரிப்பாளரும் குறைந்த முதலீட்டிலேயே தயாரித்துள்ளதால் அவருக்கு கண்டிப்பாக நல்ல லாபம் கிடைக்கும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பு தெரிவித்தது.
இப்படம் வெளியான 3 நாட்களில் சுமார் 8.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரவேற்புக்கு ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இந்தாண்டு 'பேட்ட', 'விஸ்வாசம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைத்து தரப்புக்கும் லாபகரமான படமாக 'எல்.கே.ஜி' அமையும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.
பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதி இருக்கிறார். ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார்.