

‘தேவ்’ படம் காதலை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்படவில்லை என கார்த்தி தெரிவித்தார்.
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தேவ்’. அறிமுக இயக்குநரான ரஜத் ரவிசங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் ஏற்கெனவே இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், வம்சி கிருஷ்ணா, ரேணுகா, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், கார்த்திக் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 5) இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில், கார்த்தி பேசியதாவது:
தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தைப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம். இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா? என அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
லக்ஷ்மனின் தாத்தா, ‘மதுரை வீரன்’ படத்தைத் தயாரித்தவர். அவரின் பரம்பரையில் இருந்து வந்து, லக்ஷ்மன் இந்தப் படத்தைத் தயாரிப்பதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்கிறது.
இந்தப் படம், காதல் கதை மட்டுமல்ல. உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ, அதைச் செய் என்ற கருத்தைத் தாங்கி இந்தப் படம் உருவாகியுள்ளது.
ரஜத், திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டுமென அவரைப் பார்க்கும் போதெல்லாம் கூறுவேன். ரகுல் ப்ரீத்சிங், சிறந்த நடிகை. இதுபோல் அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இந்தப் படத்துக்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்.
இவ்வாறு கார்த்தி பேசினார்.