

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ சீரியல் வழியே அசத்திய விஷ்ணு, சில ஆண்டு இடைவெளிக்குப் பின்பு விரைவில் ’ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் தொடங்கவுள்ள ‘சத்யா’ சீரியலில் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார்.
‘ஆபீஸ்’ மாதிரி ஒரு ஜாலியான தொடர் அமைந்தால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வராமல் இருக்குமா? இந்த இடைவெளியில் நல்ல பட வாய்ப்புகள் அமைந்து, கோலிவுட் பக்கமும் ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்தேன். ‘இவன் யாரென்று தெரிகிறதா’, ‘களரி’ என்று தொடங்கி ‘கொரில்லா’, ‘சிவப்பு சேவல்’ என்று வரிசையாக படங்கள் அமைந்தன. திரும்ப சேனலில் ‘சத்யா’ மாதிரி ஒரு கலகலப்பான தொடர் அமைந்ததும், அதை மிஸ் செய்ய மனசு வராமல் இங்கே ஓடி வந்துட்டேன். இந்த சீரியல் ஜீ பெங்காலி சேனலில் ‘போகுல் கோத்தா’ என்ற பெயரில் 300 அத்தியாயங்களைக் கடந்து இப்போதும் ஒளிபரப்பாகிறது. அது அங்கே மரண மாஸ் ஹிட். அதை நமது ஊர் ஆடியன்ஸுக்கு தகுந்த மாதிரி மாற்றங்கள் செய்து வருகிறோம். இதில் நான் பிரபு என்ற கேரக்டரில் வருகிறேன். பணக்கார வீட்டுப் பையன். பிசினஸ்ல பிஸியா ஓடிக்கொண்டு இருப்பவன். இதற்கிடையில் காதல், நகைச்சுவை, பாசம் என்று அத்தியாயங்கள் தொடர்ந்து நகரும். நாயகியாக ஆயிஷா நடிச்சிருக்காங்க. அந்த பாத்திர படைப்பும் செம கைத்தட்டல் வாங்கும். இந்த மாதிரி கலகலப்பான ஒரு குழுவோடு பயணிக்கும் வாய்ப்பு ஜீ தமிழ் வழியே எனக்கு கிடைச்சிருக்கு. இந்த நிகழ்ச்சியில் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்த சேனலின் நிகழ்ச்சி தலைவர் தமிழ் தாசன் அண்ணன், சத்யா, இயக்குநர் அருண் சார் உள்ளிட்ட ஜீ தமிழ் குழுவுக்கு நன்றி!’’ என்கிறார், விஷ்ணு.