

'பிங்க்' ரீமேக்கில் அஜித்துடன் கவுரவத் தோற்றத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து, 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் அஜித். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இதில் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை பிப்.15 முதல் படமாக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.
போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். அஜித் பிறந்த நாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்து பாலிவுட் இணையதளங்கள் "அப்படியொரு எண்ணம் அவருக்கு இல்லை. இந்தி படங்களில் அவர் பிஸி" என்று ஜான்வி தரப்பு கூறியதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரிப்பாளர் என்பதால், ஜான்வி கபூர் இதில் சிறு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு என்று திரையுலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் அஜித். அந்தக் கதை ஹெச்.வினோத் எழுதியுள்ள ஒரிஜினல் கதையாகும். அதையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.