

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் நாயகிக்கு கல்யாணி ப்ரியதர்ஷனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.
ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'Mr.லோக்கல்' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மே 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நீண்ட நாட்கள் கழித்து இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் - ரகுல் ப்ரீத் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறது படக்குழு.
இந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து, அடுத்ததாக 'இரும்புத்திரை' இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது இதில் நாயகியாக நடிக்க கல்யாணி ப்ரியதர்ஷனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது. மேலும், 'இரும்புத்திரை' படத்தைப் போலவே இப்படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மார்ச் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்க ஆயுத்தமாகி வருகிறது படக்குழு.