யூ-டியூப் விமர்சகர்களுக்கு இயக்குநர் பேரரசு எச்சரிக்கை

யூ-டியூப் விமர்சகர்களுக்கு இயக்குநர் பேரரசு எச்சரிக்கை
Updated on
1 min read

'கோணலா இருந்தாலும் என்னோடது' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யூ-டியூப் விமர்சகர்களுக்கு இயக்குநர் பேரரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டி.கே. பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கோணலா இருந்தாலும் என்னோடது'. கிரிஷிக், மேகாஸ்ரீ, மணாலி ரத்தோட், டெல்லி கணேஷ், அபினவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். இதில் இயக்குநர் பேரரசு பேசியதாவது:

ஒரு தயாரிப்பாளரின் சூழல் அறிந்து இயக்குநர்கள் படம் எடுக்க வேண்டும். தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சல் நிச்சயமாக அந்த இயக்குநரை நிம்மதியாக வாழ விடாது. வெற்றி, புகழ் எல்லாம் தற்காலிகம் தான்.

இப்படத்தின்  இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்தபோது படத்தின் தலைப்பை கேட்டு கொஞ்சம் தயங்கினேன். படத்தின் கதை வேறு மாதிரி இருக்குமோ என  விசாரித்த போது இப்படத்தின் கதையை சொன்னார். பிறகே வருவதற்கு சம்மதித்தேன். இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு அதன் கதை என்ன என்பதை சொல்ல பல இயக்குனர்கள் மறுக்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் முன்பெல்லாம் இயக்குநர்கள், நடிகர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என ஒவ்வொருவருக்கும் பயந்த காலம் போய் இன்று யூ டியூப்பில் விமர்சனம் செய்பவர்களுக்கு பயப்பட வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.

கோடிகளில் முதலீடு செய்து படம் எடுப்பவர்களை யாரோ ஒருவர் மிகவும் கீழ்த்தரமாக விமர்சிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது?. படங்களை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள்.. அதே சமயம் தனி நபர் விமர்சனம், ஒருமையில் விமர்சிப்பதற்கு உங்களுக்கு யாருக்கு உரிமை இல்லை. இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இது தொடர்ந்தால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்.

அதேபோல தயாரிப்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்களை மதிக்காமல் தங்கள் விருப்பப்படி படம் எடுக்கும் இயக்குநர்களை தேடி ஓடாமல், உங்கள் நிலையறிந்து உங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் படம் எடுக்கும் இயக்குநர்களை தேடிச் சென்று ஊக்குவியுங்கள் அப்போது தான் சினிமா செழிக்கும். தயாரிப்பாளரும் லாபம் அடைவார்கள்.

சமீபத்தில் இளையராஜாவின் 75-வது பிறந்த நாள் விழாவை நடத்தி சிறப்பித்தார்கள்.. மிக நல்ல விஷயம் தான். ஆனால் இந்த விழாவிற்கு காட்டிய அக்கறையில் ஒரு பத்து சதவீதமாவது நலிந்து கிடக்கும் சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களை கை தூக்கி விடுவதில் காட்டினால் நன்றாக இருக்கும்

இவ்வாறு பேரரசு பேசினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in