

தனக்கு திருமணம் என்று வெளியான செய்திகளை விளாசி நடிகர் விஷால் காட்டமாக ஒரு ட்வீட் பதிவு செய்திருக்கிறார்.
நடிகர் விஷாலுககும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவுக்கும் திருமணம் செய்து வைக்க விஷாலின் பெற்றோர் முடிவு செய்துள்ளதாகவும். இதற்கு விஷாலும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், விரைவில் ஹைதராபாத்தில் விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து விஷால் தனது ட்விட்டரில், "எனது திருமணம் குறித்து இத்தகைய தவறான செய்திகள் எப்படி பிரசுரமாகின்றன என வியக்கிறேன். தவற்றைத் திருத்திவிடுங்கள். இது நியாயமே இல்லை. இது எனது தனிப்பட்ட வாழ்க்கை. எனக்கு திருமணம் நிச்சயமானால் நானே அதை முறைப்படி அதிகாரபூர்வமாக மகிழ்ச்சியுடன் அறிவிப்பேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
நடிகரும் இயக்குநருமான அர்ஜூனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விஷால். 'செல்லமே' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'சண்டக்கோழி', 'தாமிரபரணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நாயகனாகவும் வலம்வரத் தொடங்கினார்.
மேலும், தயாரிப்பாளராகவும் மாறி 'பாண்டியநாடு', 'ஆம்பள', 'துப்பறிவாளன்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.