

இந்தியாவில் ஆங்கில இசை மற்றும் தனி இசைக் கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும், ஆதரிக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
நெக்ஸா மியூஸிக் என்ற நிறுவனம், வளர்ந்து வரும் இந்திய இசைக் கலைஞர்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பைத் தருகிறது. தேசிய அளவில் பல புதிய இசைக் கலைஞர்களை இதில் பங்கெடுக்க அழைத்துள்ளது. போட்டியில் பங்கேற்பவர்கள், ரஹ்மான் போன்ற பிரபல இசையமைப்பாளர்களால் வழிநடத்தப்படுவார்கள்.
இந்தப் போட்டி பற்றிய அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், "ஆங்கில இசை மற்றும் தனி இசைக் கலைஞர்களுக்கு நாம் உதவ வேண்டும். ஆதரிக்க வேண்டும். திரைப்பட இசையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அது அழகானது. ஆனால் நடிகர், நடிகை, கதை, இயக்குநர் என அதற்கான கட்டுப்பாடுகள் அதிகம். தனி இசையில் உங்கள் கற்பனைக்கு எல்லையே இல்லை.
சில சமயம் தனி இசைப் படங்களுக்கு தாக்கமாக அமையும். அப்படி அமைய வேண்டும் என நான் விரும்புகிறேன். தனி இசைப் பாடல் ஒன்று திரைப்படத்தில் வர வேண்டும் என நினைக்கிறேன். அது ஒன்றும் கட்டாயம் அல்ல. ஆனால் மக்கள் சிந்தனை ஒரு சின்ன வட்டத்துக்குள் மட்டுமே இருக்கக் கூடாது. அவர்களின் கற்பனையை நாம் தூண்டி விட வேண்டும். அப்படி நடக்க வேண்டுமென்றால் எந்த கட்டுப்பாடும் இருக்கக் கூடாது.
நான் தனிப்பட்ட முறையில் நிறைய அற்புதமான தனி இசைப் பாடல்களை யூடியூபில் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கான எதிர்காலம் எப்போதும் பிரகாசமாகவே இருக்கிறது. நாம் தான் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். நாம் அனைவரும் தான். தனி இசைக் கலைஞர்களுக்கான சந்தையை உருவாக்க முயற்சிக்கிறோம். ஆனால் அதற்கு நீங்கள் முதல் படி எடுத்து வைக்க வேண்டும்.
பலர் இதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அனைவரும் சேர்ந்து உழைத்து இதை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று கூறினார்.