

நடிகர் அஜித்தின் 15 அடி கட்-அவுட்டுக்கு பால் ஊற்றும்போது கட்-அவுட் சரிந்ததில், 6 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள திரையரங்கில் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படம் வெளியானது. இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு அஜித்குமாரின் உருவத்துடன் கூடிய 15 அடி கட் அவுட்டுக்கு ரசிகர்கள் சிலர் மலர் மாலை அணிவித்து பாலபிஷேகம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடிரென கட் அவுட் சரிந்து விழுந்தபோது கட் அவுட் மேல் நின்றிருந்த ஆவீயூரைச் சேர்ந்த ஏழுமலை (20), கொளத்தூரைச் சேர்ந்த ஸ்ரீதர்(25), காடகனூரைச் சேர்ந்த முத்தரசன்(18) வடகரை தாழனூரைச் சேர்ந்த அருண்(18), பிரபு(25) பிரதாப்(21) ஆகியோர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
இதில் கவலைக்கிடமான நிலையில் பிரதாப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், ஸ்ரீதர், முத்தரசன் ஆகியோர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மற்றவர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக திருக்கோவிலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.