

சென்னையில் நடைபெற்ற 'ஐ' பட இசை வெளியீட்டு விழா, ஆஸ்கர் விருது வழங்கும் விழாவைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது என்று ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசநேக்கர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, 'ஐ' படத்தின் தயாரிப்பாளர் 'ஆஸ்கர்' ரவிச்சந்திரனுக்கு அர்னால்டு அனுப்பிய கடிதத்தின் விவரம்:
"எனது சென்னை பயணத்தை வெற்றிகரமானதாக மாற்ற நீங்கள் செய்த அத்தனை முயற்சிகளுக்கும் நன்றி.
'ஐ' பட இசை வெளியீட்டில் ஓர் அங்கமாக நான் இருந்ததற்கு பெருமையடைகிறேன். நீங்களும், உங்கள் குழுவும், 'ஐ' போன்ற ஒரு திரைப்படத்தை தயாரித்ததோடு மட்டுமல்லாமல், இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு அதிகம் பாராட்டப்படவேண்டியவர்கள்.
நான் கலந்துகொண்டதில் மிகச் சிறந்த நிகழ்ச்சி இது. நான் அங்கு வந்திறங்கிய நொடியிலிருந்து என்னைக் கவனித்துக் கொண்ட விதத்தில் வியக்க வைத்துவிட்டீர்கள்.
அருமையான தங்கும் இடம், சுவையான உணவு என அனைத்தும் கச்சிதமாக இருந்தது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல இசை வெளியீடு நடந்தது. நான், ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன், கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவை பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என அவர்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.
நிகழ்ச்சி தங்கு தடையின்றி நடந்தது. அங்கிருந்த உற்சாகம், ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் தேவையான உத்வேகத்தைத் தருமளவு இருந்தது. பாடி பில்டர்களை மேடையேற்றியது சிறப்பு. அவர்களது நிகழ்ச்சி முடிந்ததும் என்னால் மேடையேறுவதை தடுக்க முடியவில்லை. ஏனென்றால் அதுதான் நான் மேடையேற சிறந்த தருணமாக நினைத்தேன்.
உங்கள் விருந்தோம்பலுக்கு மீண்டும் நன்றி. உங்களுடன் இணைந்து மீண்டும் பணியாற்றும் நாளை எதிர்நோக்குகிறேன்" என்று அந்தக் கடித்தில் அர்னால்டு கூறியுள்ளார்.