

பத்திரிகையாளர்கள் மீதான மரியாதை பன்மடங்கு அதிகமாகியுள்ளது என ‘அடங்க மறு’ வெற்றிவிழாவில் தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி.
ஜெயம் ரவி நடிப்பில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸான படம் ‘அடங்க மறு’. கார்த்திக் தங்கவேல் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில், ஹீரோயினாக ராஷி கண்ணா நடித்தார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை, க்ளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
சுரேஷ் சந்திர மேனன், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, ராமதாஸ், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் வெற்றி விழா, நேற்று (ஜனவரி 2) சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய ஜெயம் ரவி, “2015-ம் ஆண்டு ‘தனி ஒருவன்’ வெற்றி பெற்றபோது, பத்திரிகையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டானது. ‘அடங்க மறு’ படத்தின் விமர்சனங்களைப் படித்தபோது, அது இன்னும் பல மடங்கு அதிகமாகியிருக்கிறது.
கதை என்னவாக இருந்தாலும் அதை கொடுக்கும் விதம் மிக முக்கியம். இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கான அனைத்து பாராட்டுகளும் கார்த்திக்கைத்தான் சாரும். இந்தப் படத்தின் வெற்றி மூலம் கார்த்திக் மற்றும் ஹோம் மூவி மேக்கர்ஸை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ் சினிமாவில் வரவேற்கிறோம்.
நான் கதையை நம்பியதைவிட, கார்த்திக்கை நம்பினேன். அவர் எல்லோரிடமும் பேசி மயக்கி வேலை வாங்கிவிடுவார். இந்த மொத்தக் குழுவுடன் மீண்டும் இன்னொரு படத்தில் இணைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார்.