

வஞ்சிக்கப்பட்ட தமிழனை, சுயமரியாதைச் சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே என்று தனுஷ் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.
கருணாநிதியின் மறைவு குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வஞ்சிக்கப்பட்ட தமிழனை, சுயமரியாதைச் சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே! பராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து, எங்களைப்போன்ற பாமரர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே! உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம்!” என்று தனுஷ் தெரிவித்திருக்கிறார்.