

கனடா நாட்டின் டோரண்டோ பல்கலைக்கழக விருது தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இமானுக்கு வழங்கப்பட்டது.
கனடாவில் 96 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றிலே முதல் இடத்தில் இருப்பது 192 வருடம் வயதான டோரண்டோ பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் முதன் முறையாக 21 ஜனவரி மாலை அன்று தமிழ் மரபுத் தினத்தை கொண்டாடியது. உலகிலேயே ஒரு பல்கலைக்கழகம் தமிழ் மரபு தினத்துக்கு விழா எடுத்தது இதுவே முதல் முறை என்று சொல்லலாம்.
மரபு தினக் கொண்டாட்டத்தின்போது பிரபல இசையமைப்பாளர் டி.இமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த விழாவிலே அவர் இசையமைத்த டோரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை வாழ்த்துப் பாடலை வெளியிட்டார். பாடலை எழுதியவர் கவிஞர் யுகபாரதி. பாடியவர் சுப்பர் சிங்கர் புகழ் திவாகர். அதே பாடலுக்கு நிரோதினி நடனப் பள்ளி மாணவிகள் நடனமாடியது மேலும் சிறப்பாக அமைந்தது. விழாவில், 'அண்ணன்மார் கதை' வில்லுப்பாட்டும் வேறு நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இமானை வரவேற்று டோரண்டோ பல்கலைக்கழகத் தலைவர் விஸ்டம் டெட்டி பேசினார். மூன்று லட்சம் தமிழ் மக்கள் வாழும் கனடாவில் உருவாகும் தமிழ் இருக்கை புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுப்பதுடன் தமிழின் மேன்மையை அனைத்துலக மக்களுக்கும் கொண்டு செல்லும் என்று கூறினார். தொடர்ந்து இமானுடைய இசையையும் தமிழ் சேவையையும் பாராட்டி விருது வழங்கினார்.
ஏற்புரையின் போது இமான் தமிழர்கள் பலதேசங்களில் மதம், சாதி, கொள்கை எனப் பிரிந்து கிடந்தாலும் தமிழ் என்னும் 'ஒற்றைச் சொல்' அவர்களை இணைக்கிறது. தமிழின் முன்னேற்ற செயல்திட்டங்களுக்கு அவர்கள் ஒன்றாகப் பாடுபடவேண்டும் என்றார்.
இமான் விழாவுக்கு வருவார் என ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. 'விஸ்வாசம்; படம் கொடுத்த வெற்றியில் அவர் பல தயாரிப்பாளர்களுக்கு ஈடுகொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார். எனினும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக அவர் விமானத்தில் தன் செலவில் வந்து விழாவை சிறப்பாக்கியதற்கு தமிழர்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளனர்.
இமானை நல்லிணக்கத் தூதுவராக நியமித்து கனடா தமிழ் இருக்கை பெருமை கண்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கனடிய தமிழர் பேரவை ஆயிரம் பேர் கொண்ட சபையில் இமானுக்கு 'மாற்றத்திற்கான தலைவர்' விருது வழங்கி கவுரவித்ததையும் நினைவுகூரவேண்டும்.
பனி அள்ளிக்கொட்டிய விழா நாள் அன்று டோரண்டோவின் கால நிலை -30 செல்சியஸ். கனத்த பனி காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. வானொலிகளும் தொலைக்காட்சியும் மக்களுக்கு தொடர்ந்து காலநிலை எச்சரிக்கை விடுத்தன. அப்படியிருந்தும் மக்கள் விழா அரங்கத்தை நிறைத்து குழுமியிருந்தனர். தமிழ் மக்களுடைய இந்த ஆர்வ வெளிப்பாடு தமிழ் இருக்கையின் நம்பிக்கையை மேலும்அதிகரித்தது.