

‘பிக் பாஸ்’ ரைஸா வில்சன் நடிப்பில் இரண்டாவது முறையாக ஒரு படத்தைத் தயாரித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.
‘பிக் பாஸ்’ மூலம் புகழ்பெற்ற ரைஸா வில்சன் ஹீரோயினாக அறிமுகமான படம் ‘பியார் பிரேமா காதல்’. ஹீரோவாக ‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாண் நடித்தார். இந்தப் படத்துக்கு இசையமைத்ததோடு, தயாரிக்கவும் செய்தார் யுவன் சங்கர் ராஜா.
தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. சீனு ராமசாமி இயக்கிவரும் இந்தப் படத்தில், ஹீரோயினாக காயத்ரி நடிக்கிறார். ஆட்டோ டிரைவராக விஜய் சேதுபதி நடிக்கும் இதன் படப்பிடிப்பு, தற்போது தேனியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.
இந்நிலையில், தன்னுடைய மூன்றாவது தயாரிப்பான ‘Alice’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்க்கும்போது, ஹீரோயினை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
‘பியார் பிரேமா காதல்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக யுவன் தயாரிப்பில் நடிக்கிறார் ரைஸா. மணி சந்துரு இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவனே இந்தப் படத்துக்கு இசையும் அமைத்துள்ளார்.