தமிழ்த் திரையுலகில் நிலைக்க மாட்டேன், தகுதியற்றவன் என சிலர் நினைத்தனர்: விஷ்ணு விஷால்

தமிழ்த் திரையுலகில் நிலைக்க மாட்டேன், தகுதியற்றவன் என சிலர் நினைத்தனர்: விஷ்ணு விஷால்
Updated on
1 min read

தமிழ்த் திரையுலகில் நிலைக்க மாட்டேன், தகுதியற்றவன் என சிலர் நினைத்தனர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி, சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'வெண்ணிலா கபடி குழு'. இப்படத்தின் மூலமாகவே விஷ்ணு விஷால் தமிழ்த் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானார்.

ஜனவரி 29, 2009 அன்று 'வெண்ணிலா கபடி குழு' வெளியானது. அப்படியென்றால் இன்றுடன் (ஜனவரி 29) விஷ்ணு விஷால் நாயகனாக அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ளன.

வித்தியாசமான கதைக்களங்கள் மூலமாக கவனம் ஈர்த்து விஷ்ணு விஷால், அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆனதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''பத்தாண்டுகளுக்கு முன்னர் இதேநாளில்தான் நான் உங்கள் அனைவருடனும் முதன்முறையாக அறிமுகமானேன். 'வெண்ணிலா கபடி குழு' என்னை உங்களிடம் சேர்த்தது. உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. 

சிலர் நான் இத்துறையில் நிலைக்க மாட்டேன் என்றே நினைத்தனர். சிலர் நான் ஹீரோவாகத் தகுதியற்றவன் என்று நினைத்தனர். ஆனால், நான் எனது திரைப்படங்கள் மீதும் ரசிகர்கள் மீதும் நம்பிக்கை கொண்டேன். ஒவ்வொரு படத்தின் வாயிலாகவும் படிப்பினை பெற்றோம்.

இந்தப் பயணம் அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. ஆனாலும் நான் இங்கு நிலைத்திருக்கிறேன். 'வெண்ணிலா கபடி குழு', 'நீர்ப்பறவை', 'குள்ளநரிக்கூட்டம்', 'முண்டாசுப்பட்டி', 'ஜீவா', 'இன்று நேற்று நாளை', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்', 'மாவீரன் கிட்டு', 'ராட்சசன்', 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' என்று இதுவரை எனது திரைப் பயணத்தில் 10 கண்ணியமான படங்களைத் தந்திருக்கிறேன். 

இவையெல்லாம் அதிர்ஷ்டத்தால் வந்தவையல்ல. இதற்கு நிறையவே பொறுமை தேவைப்பட்டது. சினிமா பின்னணியே இல்லாமல் வந்த எனக்கு அதீத நம்பிக்கையும் நிறைய கற்றலும் தேவைப்பட்டது. 

இப்போதுதான் எனது திரைப்பயணமே தொடங்கியதாக நம்புகிறேன். எனக்கு இப்போது நம்பிக்கை பிறந்திருக்கிறது. இனி எதிர்காலத்திலும் நான் நல்ல படங்களைத் தருவேன். எனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி. பத்தாண்டுகளில் எனது ரசிகர்கள் என்ற வார்த்தையை முதன்முறையாகப் பயன்படுத்துகிறேன். 

இன்றைய தினம் என் வாழ்வில் மிகவும் உணர்வுப்பூர்வமான நாள். காரணம், சினிமாவில் நுழையவே 6 ஆண்டுகள் போராட்டம், அதன் பின்னர் சில ஏற்றங்கள் அதன் பின்னர் கடும் போட்டிகளுக்கு இடையே 10 ஆண்டுகளில் சில நல்ல படங்கள் எனக் கொடுத்திருக்கிறேன் என்பதே.

ஒவ்வொரு முறை என்னை வெள்ளித்திரையில் பார்க்கும்போதும் என் தந்தை முகத்தில் நான் காணும் புன்னகை எனை முன்னேறிச் செல்ல உந்தும்''.

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in