

ஜனவரி 20-ம் தேதி கூடவுள்ள நடிகர் சங்க செயற்குழுவில், பல முக்கிய முடிவுகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அக்டோபர் 18, 2015-ல் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்று பொறுப்புகளை ஏற்றுக்கொண்டது. 3 ஆண்டுகள் பொறுப்பு என்பது கடந்த ஆண்டுடன் முடிவுக்கு வந்தது.
ஆனால், நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி வருவதால் அதனை முடித்துவிட்டு தேர்தலைச் சந்திக்கலாம் என்று முடிவு செய்தனர். தற்போது நடிகர் சங்கக் கட்டிடமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஆகையால், இது தொடர்பாக விவாதிக்க நடிகர் சங்க செயற்குழு ஜனவரி 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள், அதற்கான செலவுகள், தேர்தல் எப்போது நடத்துவது உள்ளிட்ட பல விஷயங்களை விவாதிக்க உள்ளனர். மே அல்லது ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
இந்தச் செயற்குழு கூட்டத்தில் நாசர், கார்த்தி, விஷால் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், அனைத்து நடிகர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 12-ம் தேதி நடிகர் சங்க செயற்குழு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.