

எம்ஜிஆர் திரையுலகை விட்டு விலகி எத்தனையோ வருடங்களாகிவிட்டன. எம்ஜிஆர் இறந்து பல வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் எம்ஜிஆர் என்று சொல்லும் போதே, மனதில் ஒரு தித்திப்பு. அவர் படங்களை நினைக்கும்போதே, விருட்டென்று பொழுதுகள் பறக்கும். பாடல்களைக் கேட்டாலே, மனசுக்குள், எக்கச்சக்க எனர்ஜி சர்ரென்று ஏறும்! அதுதான் எம்ஜிஆர் எனும் மூன்றெழுத்தின் ரகசியம்!
முப்பதுகளின் இறுதியில் நடிக்க வந்த எம்ஜிஆருக்கு, ஆரம்பத்தில் கிடைத்ததென்னவோ சின்னச் சின்ன வேடங்கள்தான். அப்படி வந்த படங்களில், ஹரிச்சந்திரா எனும் படம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஹரிச்சந்திராவா? கேள்விப்பட்டதே இல்லையே என்று எல்லோரும் நினைக்கலாம்.
ஆமாம். ஹரிச்சந்திரா படம் தெரியும். இதுமாதிரி பல ஹரிச்சந்திராக்கள் வந்துள்ளன. அந்தப் பத்தோடு இதுவும் ஒன்று. ஆனால், எம்ஜிஆரின் திரையுலகப் பயணத்தில், இந்தப் படம்தான் முதல் பொங்கல் ரிலீஸ். 14.1.44ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது.
அதன் பிறகு 56ம் ஆண்டு மறக்கமுடியாத ஆண்டு, எம்ஜிஆருக்கும் தமிழ் சினிமா உலகத்திற்கும்! ஜனவரி 14ம் தேதி 1956ம் ஆண்டு பொங்கலின் போது அலிபாபாவும் 40 திருடர்களும் வெளியானது. இந்தப் படம் தமிழின் முதல் கலர் படம். கேவா கலரில் தயாரிக்கப்பட்டது. மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த முக்கியமான படம், எம்ஜிஆருக்கு!
அதையடுத்து அடுத்த வருடமே... 57ம் ஆண்டு பொங்கலுக்கு (18.1.57) எம்ஜிஆர் நடித்த சக்கரவர்த்தி திருமகள் திரைப்படம் ரிலீசானது. இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதன் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து 1952ம் ஆண்டு பொங்கல் நன்னாளில் ராணி சம்யுக்தா வெளியானது. இதன் பிறகு என்ன நினைத்தாரோ எம்ஜிஆர்? என்ன நினைத்தார்களோ தயாரிப்பாளர்கள்? வரிசையாக பொங்கலுக்கு வருடந்தோறும் வெளியானது எம்ஜிஆர் படங்கள்.
63ம் ஆண்டு எம்ஜிஆர், சரோஜாதேவி நடித்த பணத்தோட்டம் ரிலீசானது. எல்லாப் பாடல்களும் ஹிட். மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 64ம் ஆண்டு, தேவர்பிலிம்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர், சாவித்திரி நடித்த வேட்டைக்காரன் படம் பொங்கலுக்கு வெளியானது. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் பாடல், இப்போதும் வைட்டமினாக நமக்குள் கலந்து உற்சாகப்படுத்தும். ஊக்கம் கொள்ளச் செய்யும்!
65ம் ஆண்டு, எம்ஜிஆர் இருவேடங்களில் நடித்த, எங்க வீட்டு பிள்ளை பொங்கலுக்கு வெளியாகி சக்கைப்போடு போட்டது. எம்ஜிஆரின் திரையுலக வாழ்வில், இந்தப் படம் எம்ஜிஆரை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திச் சென்று உயரத்தில் வைத்தது என்றுதான் சொல்லவேண்டும். ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ எனும் பாடல், அவரின் அரசியல் வாழ்க்கைக்கும் ஏணியாக இருந்த பாடல்.
66ம் அண்டு ஏவிஎம் தயாரிப்பில் பொங்கலுக்கு ரிலீசான அன்பே வா, மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. எம்ஜிஆர் பார்முலா என்பதை இன்று வரை எல்லோரும் பிடித்துக்கொண்டு படம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏவிஎம், எம்ஜிஆர் பார்முலாவையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, துள்ளத்துடிக்கிற காதல் கதையை எடுத்து, எம்ஜிஆராலேயே மறக்கமுடியாத படமாகக் கொடுத்துவிட்டார்கள். சொல்லப்போனால், ஏவிஎம் எம்ஜிஆரை வைத்துத் தயாரித்த ஒரே படம் அன்பே வா. சரோஜாதேவி, நாகேஷ், மனோரமா, அசோகன் என பலரும் நடித்திருக்கும் படம் இது.
67ம் ஆண்டு பொங்கலுக்கு வந்த (ஜனவரி 13ம் தேதி)தாய்க்குத் தலைமகன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 68ம் ஆண்டு வந்த ரகசிய போலீஸ் 115 திரைப்படமும் நல்லதொரு வெற்றியை அடைந்தது. எங்க வீட்டு பிள்ளைக்கு அடுத்து 70ம் ஆண்டு பொங்கல் ரிலீசாக இரட்டை வேடங்களில் நடித்த மாட்டுக்கார வேலன், மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது.
இதன் பிறகு இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் எம்ஜிஆர் முதன்முதலாக நடித்த உரிமைக்குரல், பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 7ம் தேதி 74ம் ஆண்டு வெளியாகி, சூப்பர் வெற்றியைக் கொடுத்தது.
திமுகவில் இருந்து விலக்கப்பட்டதும் தனிக்கட்சி தொடங்கியதும் வெற்றிக்கனியைச் சுவைத்ததும் என அரசியலில் எம்ஜிஆரின் சாம்ராஜ்ஜியம் உருவான தருணம்... அப்போது நடித்துக்கொண்டுமிருந்தார். அமோக வெற்றி பெற்ற பிறகு, உடனடியாக ஆட்சி அமைக்க முடியாமல், ஷூட்டிங் இருந்ததால், அவசரம் அவசரமாக படத்தை முடித்துக் கொடுத்தார். அதன் பிறகே ஆட்சியில் அமர்ந்தார். பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
அப்படி எம்ஜிஆர், அவசரம் அவசரமாக நடித்துக்கொடுத்த கடைசிப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். படத்தின் இயக்குநர் பி.ஆர்.பந்துலு பாதியிலேயே இறந்துவிட, மீதிப்படத்தை இயக்கினார் எம்ஜிஆர். இன்றைக்கும் இந்தப் படத்தின் டைட்டில் டைரக்ஷன் எம்ஜிஆர் என்றுதான் போடுவார்கள்.
1978ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கல் திருநாளுக்கு வெளியான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படம், எம்ஜிஆரின் பொங்கல் ரிலீஸ் படங்களில் கடைசிப்படம் மட்டுமல்ல... எம்ஜிஆரின் திரையுலக வாழ்வின் கடைசிப்படமும் கூட!