

தனக்கும் அனிஷாவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி என்று விஷால் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷாலின் திருமணம் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வந்த நிலையில், ஜனவரி 15-ம் தேதி அவரது திருமணம் குறித்து அதிகாரபூர்வ செய்தி வெளியானது.
நடிகை அனிஷா ரெட்டி , விஷாலுடனான திருமணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்தார். தனது திருமணம் குறித்து விஷால், ''ஆம்.. மகிழ்ச்சி... மிக்க மகிழ்ச்சி... பெண்ணின் பெயர் அனிஷா அல்லா. அவர் சரியென்று சொல்லிவிட்டார். எங்களது திருமணம் முடிவாகிவிட்டது. என்னுடைய வாழ்வில் மிகப்பெரும் திருப்புமனை இதுதான். விரைவில் திருமண தேதியை அறிவிப்போம்'' என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து திரையுலகில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்தத் திருமணம் காதல் திருமணம் என்றும், எப்படி தனக்கும் அனிஷாவுக்கு காதல் மலர்ந்தது என்று விஷால் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் விஷால் கூறியிருப்பதாவது:
'' 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அப்போது சிலர் என்னைச் சந்திக்க வேண்டும் எனக் கேட்டதைத் தொடர்ந்து சந்தித்தேன். அதில் அனிஷாவும் இருந்தார். அப்போது பெண்கள் இணைந்து ‘மைக்கேல்’ என்ற ஆங்கிலப் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், அதில் அனிஷா தான் நாயகியாக நடிக்கவுள்ளார் என்றும் அபூர்வா இயக்கவுள்ளார் என்றும் கூறினார்கள்.
அப்படத்தில் பணிபுரியும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுமே விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அவர்கள் எடுக்கும் படமும் விவசாயத்தை மையப்படுத்தியே இருந்தது எனக்கு மிகவும் பிடித்தது. ஆகையால், இப்படத்தை நானே வெளியிடுகிறேன் என்றேன். அதற்குப் பிறகு தான் அனிஷா எனக்கு அறிமுகமானார்.
எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. கடவுள் அனிஷாவை என்னிடம் அனுப்பியதாக உணர்ந்தேன். அதற்குப் பிறகு இருவருமே நண்பர்களாகப் பழகினோம். ஒரு கட்டத்தில் என் காதலை அவரிடம் தெரிவித்தேன். அவரோ உடனே பதில் சொல்லவில்லை. சில நாட்கள் கழித்து சம்மதம் சொன்னார். மிகவும் சந்தோஷப்பட்டேன்.
அவர் தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கனை. சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். திருமணத்துக்குப் பிறகும் அவர் சினிமாவில் நடிப்பார். அதற்குத் தடை எல்லாம் போட விரும்பவில்லை. நடிகர் சங்க கட்டிடப் பணிகள் முடிந்தவுடன் தான் திருமணம் நடக்கும் என்று அனிஷாவிடம் சொன்னேன். அதுவரை காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்''.
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
தற்போது வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அயோக்யா' படத்தில் நடித்து வருகிறார் விஷால். இதன் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.