

விஸ்வாசம் திரைப்படத்திற்கு இருக்கைகளை பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதில் இருவர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூரில் ஐந்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் ரசிகர் மன்ற காட்சி திரையிடப்பட்டது. வேலூர் அலங்கார் திரையரங்கினுள் அதிகாலை 2.30 மணியளவில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
இருக்கைகளை பிடிப்பதில் போட்டா போட்டி இருந்தது. அப்போது, வேலூர் ஒல்டு டவுனை சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ் (32), உறவினர் பிரசாத் மற்றும் தோட்டப்பாளையத்தை சேர்ந்த பிரதாப் தரப்புக்கும் பிரச்சினை ஏற்பட்டது. வாய் தகராறு கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த பிரதாப் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேஷ், பிரசாத் ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில் இருவருக்கும் தலை மற்றும் கைகளில் கத்திவெட்டு விழுந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் தெறித்து ஓடினர். இருவரையும் வெட்டிவிட்டு பிரதாப் தரப்பினர் தப்பினர். படுகாயமடைந்த இருவரையும் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் தெற்கு காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் திரையரங்கிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.