

நடுக்கடலில் சிம்புவுக்கு ரசிகர்கள் பேனர் வைத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. பவன் கல்யாண் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபு, ரம்யா கிருஷ்ணன், ரோபோ சங்கர், சுமன், நாசர், மஹத், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வருகிற பிப்ரவரி 1-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக, நடுக்கடலில் சிம்புவுக்கு பேனர் வைத்துள்ளனர் பாண்டிச்சேரி ரசிகர்கள். படகில் சென்று அவர்கள் பேனர் வைத்துள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதே இடத்தில்தான் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்துக்கும் அவருடைய ரசிகர்கள் பேனர் வைத்தது குறிப்பிடத்தக்கது.