பி.சி.ஸ்ரீராம் சிபாரிசு செய்த ஒளிப்பதிவாளர்!

பி.சி.ஸ்ரீராம் சிபாரிசு செய்த ஒளிப்பதிவாளர்!
Updated on
1 min read

'மகாநதி' படத்துக்கு பி.சி.ஸ்ரீராம்தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் அப்போது கைவசம் படங்கள் இருந்து ஒப்புக்கொண்டிருந்ததால், வேறு ஒரு ஒளிப்பதிவாளரை சிபாரிசு செய்தார் என்று இயக்குநர் சந்தானபாரதி தெரிவித்தார்.

அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரிப்பில், கமல் நடித்து, சந்தானபாரதி இயக்கிய 'மகாநதி' திரைப்படம், இன்றளவும் மறக்க முடியாத படங்களில் ஒன்று.

இந்தப் பொங்கல் திருநாளுடன் 'மகாநதி' வெளியாகி, 25 வருடங்களாகிவிட்டன. இதையொட்டி இயக்குநரும் நடிகருமான சந்தானபாரதி, தனியார் இணையதளச் சேனலுக்கு மனம் திறந்து பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

'' 'மகாநதி' படம் பண்ணுவது என முடிவு செய்து ஒவ்வொரு நடிகர்களாக தேர்வு செய்தோம். பிறகு டெக்னீஷியன்களை முடிவு செய்யும் பணி தொடங்கியது. இந்தப் படத்துக்கு கேமிராமேனாக பி.சி.ஸ்ரீராம் பண்ணினால் நன்றாக இருக்கும் என கமலும் நானும் தீர்மானித்தோம்.

பிறகு பி.சி.ஸ்ரீராமிடம் பேசினோம். கதையைச் சொன்னோம். அவருக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால் அப்போது கைவசம் படம் ஒப்புக்கொண்டிருந்தார். என்ன செய்வது என்று நாங்கள் யோசித்தோம்.

அப்போது பி.சி.ஸ்ரீராம், என்னிடம் அசிஸ்டெண்ட்டாக இருந்த பிரபுவைப் போடுங்க. நல்லாப் பண்ணுவான். திறமைசாலி என்று தன்னுடைய சிஷ்யனுக்கு சிபாரிசு செய்தார். தன்னுடைய சிஷ்யனை அடையாளம் காட்டினார். அப்படியொரு மனசு பி.சி.ஸ்ரீராமுக்கு!

இதன் பிறகுதான் ’மகாநதி’ படத்தில் ஒளிப்பதிவாளராக, எம்.எஸ்.பிரபு அறிமுகமானார். பி.சி.ஸ்ரீராம் சொன்னது போல், லைட்டிங்கிலும் ஆங்கிளிலும் மேக்கிங்கிலும் எம்.எஸ்.பிரபு,. தன்னுடைய ஆற்றலைப் பிரமாதமாக வெளிப்படுத்தியிருந்தார்.

குறிப்பாக, படத்தில் உள்ள ஜெயில் காட்சிகளில் லைட்டிங் மற்றும் கோணங்கள் எல்லாமே மிக அற்புதமாக அமைந்தன''.

இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் குறித்தும் எம்.எஸ்.பிரபு குறித்தும் பழைய நினைவுகளை இயக்குநர் சந்தானபாரதி பகிர்ந்துகொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in