

விஜய் டிவியில் ‘ராமர் வீடு’ என்ற புதிய காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
விஜய் டிவியில் தன் நகைச்சுவைத்திறனால் கலக்கி வருபவர் ராமர். இவருடைய காமெடிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘என்னமா இப்படிப் பண்றீங்களேம்மா...’, ‘ஆத்தாடி என்ன உடம்பீ...’ போன்றவை ராமரின் அடையாளத்தைக் காட்டும் காமெடிகள்.
‘சகல ரகள’, ‘சிரிச்சா போச்சு’, ‘கலக்கப் போவது யாரு’ என காமெடி நிகழ்ச்சிகளில் கரைகண்ட ராமர், ‘ஜோடி நம்பர் 1’ நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்தார்.
இந்நிலையில், ராமரை மையமாக வைத்து ‘ராமர் வீடு’ என்ற காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அவரின் வீட்டில் நடக்கும் காமெடிகளைத் தொகுத்து இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், ராமரின் மனைவியாக அறந்தாங்கி நிஷா, மகனாக ஆதீஷ் (ஜட்டி ஜெகன்), அம்மாவாக யோகி, பக்கத்து வீட்டுக்காரராக மா.கா.பா.ஆனந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
வருகிற பிப்ரவரி 3-ம் தேதி முதல் ஒளிபரப்பைத் தொடங்கும் ‘ராமர் வீடு’ நிகழ்ச்சியை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 2 மணிக்கு கண்டு ரசிக்கலாம்.