

விஷால் நடித்து வரும் 'அயோக்யா' படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட சன்னி லியோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட ஒப்புக் கொண்டுள்ளார் சன்னி லியோன். முன்னதாக, தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் நடனமாட ஒப்புக் கொண்டுள்ள 2-வது படம் இது.
'அயோக்யா' படத்தில் விஷாலுக்கு நாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதைத் தயாரித்து வருகிறது. ‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ். இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது என்று கூறப்படுகிறது.
கோடை விடுமுறை வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது. லகரி மியூஸிக் நிறுவனம் இதன் இசை உரிமையைக் கைப்பற்றியுள்ளது.