

‘கோலிசோடா 2’வைத் தொடர்ந்து துல்கர் சல்மான் படத்தில் நடிக்கிறார் கெளதம் மேனன்.
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. துல்கரின் 25-வது படம் இது. அறிமுக இயக்குநரான தேசிங் பெரியசாமி, இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ரீத்து வர்மா, துல்கருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
விஜய் டிவி ரக்ஷன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்துக்கு, மசாலா காஃபி’ இசைக்குழு இசையமைக்கிறது. ‘உறியடி’ படத்துக்காக 3 பாடல்களை உருவாக்கிக் கொடுத்த இக்குழு, பிஜோய் நம்பியார் இயக்கிய ‘சோலோ’ படத்திலும் பணிபுரிந்திருக்கிறது.
புனே, கோவா, சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படம், ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. எல்லாவிதமான எமோஷன்களும் இக்கதையில் உள்ளன.
இந்தப் படத்தில், இயக்குநர் கெளதம் மேனன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தின் பெயர், பிரதாப்.
சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள கெளதம் மேனன், ‘கோலிசோடா 2’ படத்தில் ராகவன் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதைத் தொடர்ந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ நடிக்க இருப்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.