

'இந்தியன் 2' படத்தைத் தொடர்ந்து ஹிரித்திக் ரோஷன் நடிக்கும் படத்தை இயக்குவார் ஷங்கர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
'2.0' படத்தைத் தொடர்ந்து 'இந்தியன் 2' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்கவுள்ளது.
'இந்தியன் 2' படத்தைத் தொடர்ந்து, ஒரு சயின்ஸ்-பிக்ஷன் கதை ஒன்றை இயக்க திட்டம் வைத்திருப்பதாக இயக்குநர் ஷங்கர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இக்கதையில் ஹிரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளதாக முன்னணி பாலிவுட் இணையதங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
முன்னதாக, ஷங்கர் - ஹிரித்திக் ரோஷன் இருவருமே 'எந்திரன்', 'ஐ'(இந்தி ரீமேக்) உள்ளிட்ட பல படங்களில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், எதுவுமே இறுதிவடிவத்தை எட்டவில்லை. தற்போது '2.0' படத்துக்கு கிடைத்த உலகாளவிய வரவேற்பால், ஷங்கர் - ஹிரித்திக் ரோஷன் இணைப்பு சாத்தியம் தான் என்று பாலிவுட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
தான் இயக்கி வரும் படம் இறுதிகட்டப் பணிகள் நடைபெறும் போது தான், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் ஷங்கர். அந்த வகையில் 'இந்தியன் 2' படம் இறுதிகட்டத்தை எட்டும்போது, இச்செய்தியை உறுதிப்படுத்துவார் என தெரிகிறது.