

ரசிகர்களின் இவ்வளவு அன்புக்கு என்ன செய்யப் போறேன் என்று ரோபோ ஷங்கரிடம் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் அஜித்
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.
கடும் போட்டிக்கு இடையே கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம், இப்படத்தை தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றி வெளியிட்டது. தமிழகத்தின் வசூலில் 'பேட்ட' படத்தைத் தாண்டி 'விஸ்வாசம்' படமே முதலிடத்தில் உள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அஜித் ரசிகர்களும் இப்படத்தைக் கொண்டாடி வரும் வேளையில், 'விஸ்வாசம்' படத்தில் அஜித்துடன் நடித்த ரோபோ ஷங்கர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
கடவுள் எனக்கு 75 வயசு வரை ஆயுள் கொடுப்பதாக இருந்தால், அதில் எனக்கு 60 வயசு போதும். மீது 15 எடுத்து உங்களுக்கு கொடுத்துவிடு என்று சொல்லிருவேன் சார் என்றேன். அய்யோ என்ன நீங்க என்று அஜித் சார் நெகிழ்ந்தார். கோடான கோடி ரசிகர்களும் இதையே தான் சொல்லுவார்கள்.
நடுக்கடலில் எந்த நடிகருக்கு போய் ப்ளக்ஸ் வைக்கிறார்கள். அந்த ரசிகர்களின் அன்புக்கு கடவுள், நீண்ட ஆயுளை அஜித் சாருக்கு கொடுக்க வேண்டும். அஜித் சாரிடம் அடுத்து எப்போ சார் மீட் பண்ணுவோம் என்று கேட்டேன். கண்டிப்பா நம்ம நிறைய பண்ணப் போறோம் ரோபோ ஜி என்றார். நன்றி சார் என்றேன்.
ரசிகர்கள் செய்யும் அனைத்து விஷயங்களையுமே அஜித் சார் பார்த்து ரொம்பவே சந்தோஷப்படுகிறார். நிறைய முறை இது குறித்து பேசியிருக்கேன். இவ்வளவு அன்பு வைச்சுருக்காங்க... இதற்கு என்ன பண்ணப் போறேன். இவ்வளவு ஆபரேஷனிலும் நான் எழுந்து நடிக்கிறேன், நடக்கிறேன், ஆடுறேன், பாடுறேன் என்றால் அனைத்துமே அவர்களுடைய ஆசி தான் ரோபோ ஜி என்று ரொம்பவே நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
இவ்வளவு ரசிகர்களை நான் அடுத்தடுத்த படங்கள் கொடுத்து எப்படி சமாளிக்கப் போறேன் என்றார் அஜித் சார். அதற்கு நீங்கள் வருஷத்துக்கு 2 படங்கள் இறக்குங்க. கொண்டாடிக்கிட்டே இருப்பாங்க. 2, 3 வருஷமெல்லாம் கேப் விடாதீங்க என்றேன். கண்டிப்பா பண்ணனும், ரசிகர்களுக்காகவே பண்ணனும் என்றார்.
இவ்வாறு ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார்.