

புதிய படமொன்றில் சூர்யா மகன் தேவ் நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு, சூர்யா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
சூர்யா - ஜோதிகா தம்பதியினருக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இருவருமே பொதுநிகழ்ச்சிகளில் சூர்யா - ஜோதிகா உடன் கலந்து கொள்வார்கள். ஆனால், படத்தில் நடித்ததில்லை. சமீபத்தில், சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சூர்யாவின் மகன் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.
அச்செய்தி வெளியான சமயத்தில் 2டி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்திலும், "தங்களுடைய படத்தில் நடிக்க 6-8 வயது நிரம்பிய சிறு குழந்தைகள் தேவை" என்று விளம்பரப்படுத்தி இருந்தார்கள். இப்பதிவை வைத்து, இதில் தான் சூர்யாவின் மகன் தேவ் நடிக்கவுள்ளார் என்று செய்திகளை வெளியிட்டனர்.
சூர்யாவின் ரசிகர்களும் இதைக் கொண்டாட தொடங்கியதைத் தொடர்ந்து, 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரும், சூர்யாவின் நெருங்கிய நண்பருமான ராஜசேகர் பாண்டியன் “தவறான செய்தி. வதந்திகளைப் பரப்பாதீர்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது சூர்யா நடிப்பில் 'என்.ஜி.கே' மற்றும் 'காப்பான்' ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இப்படங்களைத் தொடர்ந்து சுதா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.