யூ-டியூப்பில் ரவுடி பேபி சாதனை: படக்குழுவினர் மகிழ்ச்சி

யூ-டியூப்பில் ரவுடி பேபி சாதனை: படக்குழுவினர் மகிழ்ச்சி

Published on

'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல் தொடர்ச்சியாக சாதனைகள் செய்துவருவதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாரி 2'. வுண்டர்பார் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார்.

டிசம்பர் 21-ம் தேதி வெளியான இப்படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' என்ற பாடல், படம் வெளியாகும் முன்பே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் லிரிக்கல் வீடியோ மட்டும் 50 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்தது.

மேலும், படத்திலும் இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். அவருடைய மேற்பார்வையில் தனுஷ், சாய்பல்லவி இருவரது நடனம் அமோக வரவேற்பைப் பெற்றது.ஜனவரி 2-ம் தேதி மாலை 'ரவுடி பேபி' பாடலை படக்குழுவினர் யூ-டியூப் இணையத்தில் வெளியிட்டது.

குறைந்த நேரத்தில் 50 லட்சத்தை கடந்து, தற்போது 1கோடி பார்வைகளை கடந்து சாதனை புரிந்துள்ளது. இது பெரும் சாதனையாகும். மேலும், குறைந்த நேரத்தில் அதிக லைக்குகளை பெற்ற வீடியோ பாடல் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. மேலும், மியூசிக்கலி ஆப்பில் 3,50,000 வீடியோக்கள் இப்பாடலுக்கு வந்திருப்பதும் சாதனையாகும்.

தொடர்ச்சியாக சாதனைகள் புரிந்துவருவதால், இப்பாடலில் சம்பந்தப்பட்ட யுவன் ஷங்கர் ராஜா, தனுஷ், சாய் பல்லவி, பிரபுதேவா என அனைவருமே பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அப்பாடலைக் காண:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in