

நம் படத்தை திட்டும் போதும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று 'சார்லி சாப்ளின் 2' பத்திரிகையாளர் சந்திப்பின் போது பிரபுதேவா தெரிவித்தார்
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, பிரபு, அதா ஷர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சார்லி சாப்ளின் 2'. அம்ரீஷ் இசையமைத்த இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு நீண்ட நாட்களுக்கு முன்பே முடிவடைந்துவிட்டாலும், சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது. தற்போது ஜனவரி 25-ம் தேதி வெளியாகவுள்ளதால், 'சார்லி சாப்ளின் 2' படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்கள்.
அப்போது பிரபுதேவா பேசியதாவது:
இப்படத்தில் நடித்த நாட்கள் ரொம்ப சந்தோஷமான நாட்கள். படத்தைப் பார்த்து சிலர் திட்டுவார்கள், சிலர் பாராட்டுவார்கள். பாராட்டை எடுத்துக் கொள்ளும் போது, திட்டுவதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். டிஜிட்டலில் பலரும் ரொம்ப அருமையாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
மற்றவர்கள் படத்தை திட்டும் போது சந்தோஷமாக இருக்கு இல்லயா. அதைப் போல நம்ம படத்தை திட்டும் போதும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 'சார்லி சாப்ளின் 2' படம் பார்த்துவிட்டேன். ரொம்ப நல்லா வந்திருக்கும் இப்படம் பாகம் 3, 4, 5 என செல்ல வேண்டும். நல்ல மனதோடு செய்திருக்கும் படம்
இவ்வாறு பிரபுதேவா பேசினார்.