

தமிழகத்தில் நடிகர்கள் முதல்வராக வரக்கூடாது என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மலையாள தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடலில் கேள்வி ஒன்றுக்கு சத்யராஜ் பேசும்போது, ''எனது 41 வருட சினிமா பயணத்தில் அரசியல் எப்போதும் என்னைக் கவர்ந்ததில்லை. தியாகமும், அர்ப்பணிப்பு உணர்வும் வேண்டுகிற முதல்வர் பதவிக்கு நாங்கள் தகுதியற்றவர்கள். முதல்வராக வேண்டும் என்றால் ஆரம்பத்திலிருந்து மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு நாம் பயணிக்க வேண்டும்.
சினிமாவில் உள்ள பிரபலத்தைப் பயன்படுத்தி முதல்வராக வேண்டும் என்பது சரியான முறையல்ல. நடிகர்களின் அரசியல் என்பது முதல்வர் பதவிக்கானது. மக்களின் சேவைக்கானது அல்ல.
நான் கேரள முதலவர் பினராயி விஜயனை மதிக்கிறேன். அவர் சிறந்த அரசியல்வாதி. அவரைப் போல தமிழகத்திலும் நல்ல தலைவர்கள் உள்ளனர். நாம் முதல்வர்களை திரைத்துறையிலிருந்து தேர்ந்தெடுக்கக் கூடாது.
உதாரணத்துக்கு தமிழகத்தில் நல்லகண்ணு என்ற சிறந்த தலைவர் இருக்கிறார். அவரைப் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை'' என்று சத்யராஜ் தெரிவித்துள்ளார்.