

கருத்துச் சொல்கிறேன் என்று படமெடுப்பவர்கள் உண்டு. புதுமை பண்ணுகிறேன் என்று படமெடுப்பவர்களும் இருக்கிறார்கள். தியேட்டருக்கு நம்பி வருபவர்களை, அவர்களின் கஷ்டங்களையெல்லாம் மறந்து, வாய்விட்டுச் சிரிக்க வைப்பதே நோக்கம் என்று படம் பண்ணுவர்களும் உண்டு. அவர்களில், முக்கியமானவர் இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி.
நகைச்சுவை உணர்வு கொண்ட காட்சிகள் என்பதற்காக அச்சுப்பிச்சு காமெடிகளெல்லாம் பண்ணுவதில்லை சுந்தர்.சி. கதையோடு வந்திருக்கும் காமெடி. அந்தக் காமெடியும் கதைக்கு ஒட்டாமலோ, இரட்டை அர்த்த வசனங்களாகவோ இருக்காது. கதையுடன் காமெடி பண்ணுவதில் கெட்டிக்காரர் என்று பேரெடுத்தவர்.
கொங்கு தேசத்தைச் சேர்ந்த சுந்தர்.சி., கல்லூரிப் படிப்பையெல்லாம் முடித்துவிட்டு, படிப்பு தொடர்பான வாழ்க்கையா, ஆசைப்பட்ட சினிமாவா என யோசித்தார். சினிமாதான் என முடிவு செய்தார். இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார்.
சுந்தர்.சிக்கு இயல்பாகவே இருக்கும் நகைச்சுவை உணர்வு, நகைச்சுவைக்கும் குசும்புக்கும் பெயர் பெற்ற மணிவண்ணனிடம் உதவியாளர் பணியும் சேர்ந்துகொள்ள, பிறகென்ன... பல படங்களில் அவருடன் பணியாற்றினார். இன்னும் சினிமாவைக் கற்றுக்கொண்டார்.
இதன் பிறகு 95-ம் ஆண்டு தன்னுடைய முதல் படத்தை இயக்கினார். ஜெயராம், கவுண்டமணி காம்பினேஷனில், கதையும் காமெடியுமாக உருவான 'முறைமாமன்' நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் படத்தின் நாயகி, குஷ்பு, படத்துக்கு மிகப்பெரிய பலம். பிறகு முதல் பட நாயகியே, தன் முழு வாழ்க்கைக்குமான நாயகியாவார் என்று சுந்தர்.சி அப்போது நினைத்திருக்கமாட்டார்.
அடுத்த வருடமே, மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்தார் சுந்தர்.சி. இந்த முறை கார்த்திக், கவுண்டமணி. கலகலவென படம் போனதும் தெரியவில்லை. சில்வர் ஜூப்ளி கொண்டாடியதும் தெரியவில்லை. பாடல்கள் அத்தனையும் ஹிட்டடித்தது. காதல், காமெடி, பாடல்கள் என எல்லாவற்றையும் அழகுறச் சேர்த்துக் கோர்த்துக் கொடுத்திருந்தார் இயக்குநர் சுந்தர்.சி. அந்தப் படம்... 'உள்ளத்தை அள்ளித்தா'.
இதேசமயத்தில், ரஜினியே அவரை அழைத்தார். படம் பண்ணுவோம் என்றார். ரஜினியை வைத்து 'அருணாச்சலம்' படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், சுந்தர்.சியின் கிராஃப் ஏறிக்கொண்டே போனது. கார்த்திக்கை வைத்து 'மேட்டுக்குடி', சரத்குமாரை வைத்து 'ஜானகிராமன்', அஜித்துடன் 'உன்னைத்தேடி', பிரபுதேவாவுடன் இணைந்து 'நாம் இருவர் நமக்கு இருவர்', கார்த்திக்குடன் 'உனக்காக எல்லாம் உனக்காக,' 'அழகிய நாட்கள்' என பல படங்கள். பிரபுதேவாவுடன் 'உள்ளம் கொள்ளை போகுதே', அர்ஜூனுடன் 'கிரி', மாதவனுடன் 'ரெண்டு', பிரசாந்துடன் 'வின்னர்' என்று தொடர்ந்து ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொருவிதமாகக் கொடுத்துக்கொண்டே இருந்தார். அசத்திக்கொண்டே இருந்தார் சுந்தர்.சி.
கமலுடன் இணைந்து மாதவனையும் சேர்த்துக்கொண்டு, 'அன்பே சிவம்' பண்ணினார். ‘எத்தனை படங்கள் எடுத்தாலும் அன்பே சிவம், எனக்கு மிகப்பெரிய மரியாதையைக் கொடுத்திருக்கு’ என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் சுந்தர்.சி.
காமெடியாக சீன் பிடிப்பது ஒருவகை. காமெடி நடிகர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது இன்னொரு வகை. இந்த இரண்டுமே சுந்தர்.சி.யின் ஸ்பெஷல். அப்படித்தான் 'கிரி', 'வின்னர்' என பல படங்களில் வடிவேலுவிற்காகவே சீன் எழுதினார். அதை படத்தோடு சேர்ந்துவருவது போலவும் உருவாக்கினார். இன்றைக்கும் 'கிரி' மற்றும் 'வின்னர்' படங்களின் காமெடிக்கு வெடித்துச் சிரிப்போம்தானே! இந்தப் பட்டியலில் 'லண்டன்' படத்தையும் அந்தக் காமெடியையும் சேர்த்துக்கொள்ளலாம்.
நடுவே குஷ்புவை மணந்துகொண்டார். குஷ்புவுக்கு ஹீரோவானார். அடுத்தகட்டமாக, 'தலைநகரம்' படத்தின் மூலமாக நாயகனாகவும் வலம் வரத் தொடங்கினார். வரிசையாக ஏகப்பட்ட படங்கள். இரண்டு படங்களில் நடிப்பார். தடக்கென்று படம் இயக்குவார். திடீரென படம் தயாரிப்பார். திட்டமிடலும் கடும் உழைப்பும் சுந்தர்.சி.யின் எனர்ஜி.
'அரண்மனை', 'அரண்மனை 2' என இரண்டு படங்களுமே ஹிட் கொடுத்தார். முன்பு 'கலகலப்பு' கொடுத்தவர், பிறகு 'கலகலப்பு 2'-வும் கொடுத்து ரசிகர்களைக் கலகலப்புடன் இருக்கச் செய்தார்.
ஒரு கல்யாண வீடு, நான்கைந்து நடிகர்கள். ஒரு உருட்டுக்கட்டை. இதை வைத்துக்கொண்டே அரைமணி நேரம் நம்மைச் சிரிக்கவைத்துவிடுகிற சாதுர்யமும் சாமர்த்தியமும் சுந்தர்.சிக்கு உண்டு.
இத்தனை படங்கள் எடுத்திருக்கிறார். இயக்கியிருக்கிறார். நடித்திருக்கிறார். தயாரித்திருக்கிறார். எந்தப் படமும் முகம் சுளிக்கும்படி இல்லாமல் பார்த்துக்கொண்டதுதான் சுந்தர்.சி.யின் அக்கறை. எடுத்த படங்கள் எல்லாமே குடும்பத்துடன் வந்து பார்த்து, குதூகலிக்கும்படியாகவே அமைத்திருப்பதுதான் சுந்தர்.சி. ஸ்டைல்!
கொண்டாடப்படவேண்டிய குதுகலமான கலகல இயக்குநர் சுந்தர்.சிக்கு இன்று 21.1.19 பிறந்த நாள். மனம் கனிந்த வாழ்த்துகளை சுந்தர்.சிக்குச் சொல்லுவோம். அதே உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் இன்னும் இன்னும் படங்கள் கொடுங்க சுந்தர்.சி.சார்!